அன்பின் முழுமை

எப்பொழுதும் தரையில் பாயில் தான் படுக்கை. சுற்றிலும் கொசுவலை கட்டி தரையில் நகர்ந்துவிடாமல் இருக்க உள்ளே சுற்றிலும் ஏதாவது துணியைக் கொண்டு பாரமாக வைத்துவிட்டு காதிலும் பஞ்சை நுழைத்துக்கொண்டு பொத்திக்கொள்ள போர்வையையும் எடுத்துக்கொண்டு உள்ளே வந்து படுத்துவிட்டால் விடியற்காலை வரை ஒன்றும் தெரிவதில்லை.

நேற்று இரவில் கொசுவலையின் உள்ளே வந்துவிட்டு எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு படுத்துக்கொண்டு, பின்பு போர்த்தலாம் என்று பார்த்தால் என்னுடைய போர்வையைக் காணவில்லை. எடுத்துக்கொள்ள மறந்துவிட்டேன். திரும்ப வெளியே போய் எடுத்துக்கொண்டு வரலாம் தான். ஆனால் கொசுக்களும் அவற்றைக் கொல்லவேண்டிய உபத்திரவமும் சேர்ந்து வரும். தூக்கம் கண்ணைச் சுற்றும் பதினொன்றரை மணி. அவரைப் போய் எடுத்துக்கொண்டு வரச்சொல்லலாமா? சொன்னால் செய்வார்தான். ஆனால் என்னைப்போலத்தானே அவருக்கும் இருக்கும். முந்திவிட்டார், ‘இரு. போய் எடுத்துக்கொண்டு வருகிறேன்’. அவர் சொன்னதிலேயே எனக்குத் தூக்கம் போய்விட்டதுபோல இருந்தது. எனக்கு கொஞ்சம் குற்றவுணர்வு, அவருக்கு வருகிற தூக்கத்தை கெடுத்துவிடுவோமோ என்று.

’வேண்டாம், வேண்டாம். காதில் பஞ்சை வைத்து சமாளித்துக்கொள்கிறேன். நடுவில் எழும்பவேண்டியதாக இருந்தால் எடுத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுகிறேன். இப்படியே தூங்கலாம்’, நான்.

எனக்கு இந்த உணர்வை வராவிடாதபடி காத்துக்கொண்டார் அவர், ‘சரிம்மா. தூங்கு. இடையில் எழும்பவேண்டி இராவிட்டால் பரவாயில்லை. ஆனால் குளிர் அதிகமானால் என்னிடம் வந்துபடு’, அவர். அதில் உறவுக்கான அழைப்பின் சாயலே இல்லை.

அதிகாலை 4 மணி. குளிரில் அவரை அண்டினேன். அன்னைமடி போன்ற கதகதப்பு. அப்பாவின் தோளைப் போன்ற பாதுகாப்பு. வேறு எதுவும் வேண்டாம் போல இருந்தது. பூனைக்குட்டியாய் சுருண்டு தூங்கினேன்.

தினமும் இப்படியே போர்வையை எடுத்துக்கொள்ள மறந்துவிடலாமா என்று நினைக்கிறேன்.

——————-
(புனைவு)
——————-

ஒருவருக்கு அதிகார மனப்பாங்கும்,
மற்றவருக்கு குற்றவுணர்வுகளும்,
ஒருவருக்கு மன்னிக்கும் தோரணையும்,
மற்றவருக்கு இகழ்வுணர்வும்
தனக்குத் தோன்றாதபடியும்,
மற்றவருக்கு தோற்றுவாயாக அமையாமலும்
தன்னைத்தான் காத்துக்கொள்ள முடியுமானால்

அன்பு அங்கேதான் முழுமை பெறுகிறது

என்பது என் அனுபவம்.

——————-

சுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்–கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப, காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
–ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்.

——————-

Advertisements

One thought on “அன்பின் முழுமை

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s