ஆல்போல் தளைத்து அருகுபோல் வேரோடி

ஊரில் முளைப்பாரி கட்டுவார்கள். அதற்கு ஒருவாரம் முன்பேயே ஒரு பாத்திரத்தில் எரு மண் போட்டு தானியங்களைத் தூவி தண்ணீர் தெளித்து வைத்து மேலே ஒரு அண்டாவைப் போட்டு மூடியும் விடுவார்கள். தினமும் திறந்து தண்ணீர் தெளிப்பார்கள், மூடுவார்கள். மூன்று நான்கு நாட்களில் லேசாக மண்ணை முட்டிக்கொண்டு வெளிக்கிளம்பும் மேல்தோலோடு கூடிய விதை இன்னும் ஓரிரு நாட்களில் வெளிச்சம் இல்லாததால் வெளிர் மஞ்சள் இளம் இலைகளை வெளித்தள்ளும். இன்னும் சில நாட்களில் கொஞ்சம் வளரும், தண்டு இன்னும் சில இலைகளோடு. ஒரு சிறு தட்டில் கொஞ்சம் மண்தான். நன்கு வேர்பிடித்து வெகுநாட்கள் வளர்ந்து அறுவடை செய்யும் அளவுக்கு மண்பிடிப்பு இல்லை. சாமிக்கு நேர்ந்து கொஞ்சநாள் வளர்த்து பொட்டோடும் பூவோடும் மண்ணோடும் வேரோடும் கொண்டுபோய் தண்ணியில் கரைத்துவிடுவார்கள்.

young sprout

இன்னொரு இடத்தில் வீட்டுத்தோட்டத்தில் பயிர் போடுவார்கள். நிலத்து மண், தரமான கீரை விதை, நல்ல காற்றோட்டம், நல்ல சூரிய ஒளி. செழித்து வளராதா என்ன? ஒரு மழை – சரி மழை. போயிற்று. எல்லாம் தண்ணீர் தேங்கி வேரெல்லாம் அழுகி…. அன்றே அனைத்து கீரைகளையும் அறுத்து சல்லிசாக விற்று, முடியாவிட்டால் வீட்டுக்கு வீடு இலவச விநியோகம் தான். ஆனால் அந்த நாற்று முழுவதும் காலி. மீண்டும் புதியதாகத்தான் ஆரம்பிக்கவேண்டும்.

இதே நிலை முருங்கை போன்ற செழித்த மரத்திற்கும் வரக்கூடும் பலமான காற்றினால். மரமே முறியும். அடுத்தநாள் பார்த்தால் மரம் மொட்டை. மீண்டும் தளிக்க அடுத்த சீஸன் ஆகலாம். ஆனால் காத்திருக்கவேண்டும்

.murugai

இன்னொரு வகையில் விதையை தண்ணீரில் போட்டு ஊறவைத்து துணியில் முளைகட்டி வைப்பார்கள். இலேசாக விதை முளைத்து வரும்போதே மீண்டும் நன்கு அலசி சூரிய ஒளியில் நன்கு முறுகக் காயப்போடுவார்கள். எடுத்து அரைத்தும்விடுவார்கள். இதிலிருந்து எந்தச் செடி முளைத்து பத்தும் நூறுமாய்ப் பலன் தரப்போகிறது.

sprout

எந்த விதையும் முளைப்பதற்கு முதலில் மண், பிறகு நீர், அடுத்து காற்று, ஒளி தேவை. அப்போதுதான் பச்சையச் செறிவுள்ள இலைகளை அது உண்டாக்கி நல்ல விளைச்சலைத் தரும்.

இது பயிர்விளைச்சலுக்கான பதிவா? இல்லை.

நட்பு.

நட்பின் விதை தனக்கு ஏற்ற இடத்தில் விழவேண்டும். விழுந்த அந்த நிலமாகிய மனம் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இருக்கவேண்டும். பின்னர் தேவையான காரணிகள் அனைத்தும், அனைத்தும் என்றால் அனைத்துமே சரியாய் இருந்தால் வளரும். பின்னர் அது நல்ல பலனைத் தரும்.

சில நட்புகள் சில காரணங்களுக்காகவே உருவாக்கப்படுபவை. அது அதிகம் வளர்ந்துவிடக்கூடாது என்றே சில காரணிகள் மறுக்கப்பட்டு பூவோடும் பொட்டோடும் கரைத்து வைக்கப்படுபவை.

இன்னும் சில கீரைப்பாத்தி தான். எதிர்பாராத காரணிகள் மழையாய் வரும்போது தாங்கமுடியாமல் அழுகிக்காணாமல் போய்விடும்.

நன்குவளர்ந்த நட்புகள் கூட முருங்கைபோன்று சூழ்நிலைக்காரணிகளால் முறிந்து போய் சில பல முயற்சிகளுக்குப் பின் மீண்டும் தளிர்க்கலாம், ஒருவேளை.

நட்பை உண்டாக்குவதுபோல உண்டாக்கி முளைக்கும் பருவத்திலேயே அரைத்துவிட்டால் நல்ல சத்து என்று இன்ஸ்டன்ட் ரிசல்ட் எதிர்பார்ப்பவர்களும் உண்டு.

ஆனால், ஆல்போல் தளைத்து அருகுபோல் வேரோடி என்பது நல்ல குடும்பத்திற்கும் மட்டும்தான் பொருந்துமா?

aruku

என்னைப் பொறுத்தவரை நல்ல நட்புக்கும்தான். எங்கள் நட்பைப் பார்த்து மற்றவர்கள் நட்பைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற முன்மாதிரியாக ஒரு மனிதமும் வாழ முன்வரவேண்டும்.

Advertisements

2 thoughts on “ஆல்போல் தளைத்து அருகுபோல் வேரோடி

 1. நண்பரே,

  அருமை. நல்ல உதாரணங்களுடன்
  அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள்.

  இதைத்தவிர, தனியே – சிந்தனைக்காக
  ஒரு கேள்வி –

  இளம் வயது நண்பர்களுடன் எந்தவித ஒளிவு
  மறைவும் இல்லாமல் பழக முடிகிறது.
  நட்புக்காக, நண்பனுக்காக – எந்த சிரமத்தையும்,
  எத்தகைய விட்டுக் கொடுத்தலையும் –
  மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்.

  ஆனால், 40-50 வயதுக்கு மேல் ஏற்படும்
  நட்புகளில் அந்த அளவிற்கு நெருக்கம்
  ஏற்படுவதில்லை என்பதை உணர்கிறீர்களா …?
  இந்த வயதில், இந்த நட்பால் என்ன பயன்
  கிடைக்கும் என்று யோசித்து தான் நட்பையே
  தொடர்கிறார்களே – அனுபவித்திருக்கிறீர்களா …?

  இதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன
  என்பதை உணர முடிகிறதா …?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s