கதை எப்படிப் படிக்கவேண்டும்?

(கேள்விகளிலேயே தலைப்பை எவ்வாறு பொறுத்துவது என்று வா.மணிகண்டன் அவர்களின் நிசப்தத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அவ்வளவு கேள்விக்குறித் (!) தலைப்புகள் அவரது வலைப்பூவில். Thanks Manikandan. )

நீரிலும் நடக்கலாம்

168 பக்கங்களை 168 நிமிடங்களில் முடித்தேவிடலாம். அவ்வளவு சுறுசுறு. காரமா இனிப்பா என்பது அவரவர் விறுவிறுப்பைப் பொறுத்தது. ஆனால் அப்படியெல்லாம் படிக்காதீர்கள். என்னைப்போல பதினைந்து கதைகளை, ஒருநாளைக்கு ஒருகதையாக நிதானமாகப் பதினைந்து நாட்கள், ஒருகதையைப் படித்துவிட்டு பேசாமல் ஒரு ஈஸிசேரில் சாய்ந்துவிடுங்கள். மெல்லமெல்லக் கொறித்து பின்பு அசைபோட்டு செரித்துவிட்டு அடுத்ததற்கு நகருங்கள். அது ஒரு சுகம். அந்த சுகத்தை இந்தக் கதைத் தொகுப்பு தருகிறது. ‘நீரிலும் நடக்கலாம்’ என்பது மூன்றாவது கதையாக வருகிறது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றெல்லாம் ஒப்பிடமுடியாது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சோறு. லெமன் ரைஸ், கர்ட் ரைஸ், கோகோனட் ரைஸ் மாதிரி – ரைஸ் என்றால் சோறுதானே! சித்ரான்ன அணிவகுப்பு என்றால் மிகையில்லை.

வாழ்க்கையில் பின்னோக்கிப் பார்க்கக்கூடாது, முன்னோக்கியே செல்லவேண்டும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பின்னோக்கி நடப்பவரைக் குறித்த கதை இது. நடக்கிறது என்றால் உடல்ரீதியாகவே நடக்கிறவர். ஓரறிவுப் பூச்சிகள் கூட நீரில் நடக்கமுடியும்போது ஆறறிவு மனிதரால் பின்னோக்கி நடக்கிறவரால் நீரில் நடக்கமுடியாதா என்ன? நடக்கமுடியும். அதற்கு ஞானியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மந்திர தந்திரங்கள் கொண்ட கதை என்று நினைத்துவிடாதீர்கள்.

• தன் பசிக்கு யாரிடமும் கைநீட்டாத ரோஷமுள்ள மனுஷன்
• அடுத்தவன் பசியை மதிக்கத் தெரிந்த நிஜமான மனுஷன்
• பசிக்கு சோறுபோடாத தன் குடும்பத்தைப் பற்றி தப்பாகப் பேசாத மனுஷன்
• தனக்குப் பிடித்ததை மட்டுமேசெய்கிற மனுஷன்
• தன்னை உலகம் கேவலமாக நினைக்குமே என்ற மனக்குமுறல் அற்ற மனுஷன்
• எதற்குமே அடங்காத மனசையும் உடம்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனுஷன்

இப்படிப்பட்டவன் மனிதனாகவே இருந்துவிடமுடியுமா? அவன் ஆசாமியாகவே இருந்தவரைக்கும் அவனை மனிதனாக நினைக்கமுயலாத சமூகம், அவனை சாமியாக்கி அழகுபார்க்கிறது. விளைவு மயில்வாகனம் (சுவாமிகள்). பின்விளைவு: சுரேந்திர(ன் அண்ணன்) சுவாமிகள்

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று சொல்வார்கள். ஆனால் இங்கு ஆசாமி சுவாமியாக புரோமோஷன் வாங்குவதும், வீட்டைவிட்டு வெளியேசென்றறியாத சாதாரண இல்லத்தரசி-தனிமனுஷியாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி சாதனைப் பெண்ணாக உருமாறுவதும் அழிவு என்று பொருளில்லை. ஒரு வகையான Transformation தானே.

எதிர்ப்பைக் காட்டும் வகை என்ன? சுதந்திரமாக வாழ்வது என்றால் என்ன? மற்றவர்களை தண்டிப்பது எப்படி? எப்படித் தண்டித்தால் “அடி விழாது ஆனால் அடிவிழும்”. அப்படி அடி விழும்போது அதைப்பார்த்து வக்கிரமாய் சிரிக்காமல் ஞானியாய் வாழ்வது எப்படி? அதற்காக விரக்தியான முடிவுகள் இல்லை. எல்லாமே பாஸிட்டிவ் அப்ரோச் தான்.

“ஒருத்தனை உலகம் புரிஞ்சிக்கிடாம போய்ட்டா தப்பில்லை, ஆனா வீடு புரிஞ்சிக்கிடாமல் போயிட்டா அந்த வாழ்க்கை நரகம்தான். எங்க அண்ணனை ஊரும் புரிஞ்சிக்கிடலை, வீடும் புரிஞ்சிக்கிடலை, அவனுக்கு அது ஒண்ணும் பெரிய குறையாகவும் இல்லை. அவன் மனசு எத்தனை பேருக்கு வரும் சொல்லு. ”

ராக்கெட் கேள்விகள், மத்தாப்புப் பதில்கள். ஒருநாள் தீபாவளி இல்லை இந்தப் புத்தகம். பதினைந்துநாள் கலியாணக் கொண்டாட்டம்.

வாழ்க்கையை வாழ்வது சவால் இல்லை, அதை எதிர்நின்று வாழ்வதுதான் ஒரு சவால் என்று கதைமாந்தர் ஒவ்வொருவர் வாயிலாகவும் ஆசிரியர் எளிதாகப் புரியவைத்திருக்கிறார், ஆனால் மொட்டவிழும் தருணம் என்று சொல்கிறோமே, அதைப்போல, எப்போது என்று தெரியாதபடி புரியவைத்திருக்கிறார்.

வெறும் 11பக்கக் கதைக்கு இவ்வளவு நீள விமர்சனமா என்று ஆச்சரியப்படவேண்டியதில்லை. இந்த ஒரு கதையைப் படித்து ஒருநாள் அசைபோட்டது இன்னும் நிறைய.

வித்தியாசமான கதைக்களங்கள். ஒருநாளைக்கு ஒருகதையாக நிதானமாகப் படித்துவிட்டு பேசாமல் ஒரு ஈஸிசேரில் சாய்ந்துவிடுங்கள். மெல்லமெல்லக் கொறித்து பின்பு அசைபோட்டு செரித்துவிட்டு அடுத்ததற்கு நகருங்கள். அது ஒரு சுகம். பதினைந்து நாட்களுக்கான அந்த சுகத்தை உறுதியாகத் தரும் என்று நம்புகிறேன், எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பு ‘நீரிலும் நடக்கலாம்’.

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள் அப்படி இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். இவரது சிறுகதைத் தொகுப்புகள்: 15, நாவல்கள்: 6, கட்டுரைத் தொகுப்புகள்: 28, திரைப்பட நூல்கள்: 7, குழந்தை நூல்கள்: 11, உலக இலக்கியப் பேருரைகள்: 7, வரலாறு: 2, நாடகத் தொகுப்பு 3, நேர்காணல் தொகுப்பு: 2, மொழிபெயர்ப்புகள்:3, தொகை நூல்கள்: 3, ஆங்கில நூல்கள்: 2….
இப்பொழுதே கண்ணைக்கட்டுகிறது.

ஆசிரியர் குறித்து மேலும் விவரங்களுக்கு http://www.sramakrishnan.com
புத்தகத் தேவைக்கு uyirmmai@gmail.com / http://www.uyirmmai.com
விலை: ரூ.130
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், ஆகஸ்ட் 2014.

———-

பி.கு. ஒரு புக்மார்க் அட்டை வைத்துக்கொண்டு படித்தால் நலம். பொருளடக்கத்தின் பக்கங்கள் இரண்டிரண்டாக தவ்விக்கொண்டிருக்கிறது. சில டைப்போஸ் ஆங்காங்கே கண்ணில் படுகிறது. அவற்றையெல்லாம் குற்றமாகக் கருதிக்கொண்டிருந்தால் சுற்றமில்லைதானே, போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம்.

Advertisements

3 thoughts on “கதை எப்படிப் படிக்கவேண்டும்?

 1. வணக்கம் …

  பசிக்கு சோறுபோடாத தன் குடும்பத்தைப் பற்றி தப்பாகப் பேசாத மனுஷன்
  • தனக்குப் பிடித்ததை மட்டுமேசெய்கிற மனுஷன்
  • தன்னை உலகம் கேவலமாக நினைக்குமே என்ற மனக்குமுறல் அற்ற மனுஷன்
  • எதற்குமே அடங்காத மனசையும் உடம்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனுஷன்…

  இப்படி ஒருத்தன் இருந்தால் என்ன விளைவுகளை சந்திப்பான் என்பதை கண்முன்னே காட்டி கடித்து குதறி நல்ல எண்ணங்களின் விதைகளை பாரபட்சமின்றி தூவியவன் என்றுமே கேடுகெட்டவன் ஆவான் என்பது சமூகப்பார்வை ஆனால் கடவுளின் நீதிமன்றத்தில் வாதி ஒருகூண்டு பிரதிவாதி ஒரு கூண்டில் ஏற்றி தீர விசாரிப்பின் கடவுள் தீரவிசாரித்து “கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்”
  அப்போது தான் தீர்ப்பின் சாராம்சம் தெளிவாக உரைக்க முடியும் என்பான்… எவ்வளவு நெளிவு சுளிவு நிறைந்த வாழ்க்கை அதில் எதிர்மறை எண்ணங்கள் அழித்து நேர்மறை எண்ணங்களை தூவி தூய்மைக்கு முக்கியத்துவம் வழங்கி அனைத்துக்கும் கடமை என்ற சொல் மறக்காநிலையில் …..

  முள்வேளிக்குள் வாழ்வை வழிநடத்தியவன் சின்ன செல்ல சந்தோசங்களும் வழிமொழிந்தவன் இன்று எங்கெங்கு காணிணும் நிறைகுறை …

  எல்லா நிலைக்கும் சமநிலை உண்டு அது கருத்துக்கும் காட்சிப்பிழைக்கும் என்றுமே குழப்பம் …

  இதுவும் கடந்து போகும் என்ற மந்திர சொல் ஒன்றே மனிதம் வாழவும் வாழ்த்தவும் நிலையானது…

  விசாரணைக்கு எல்லையில்லை என்போன்றவர்களுக்கு என்றென்றுமே…

  நல்ல பதிவு நண்பரே…

 2. • தன் பசிக்கு யாரிடமும் கைநீட்டாத ரோஷமுள்ள மனுஷன்
  • அடுத்தவன் பசியை மதிக்கத் தெரிந்த நிஜமான மனுஷன்

  இந்த வாக்கியங்கள் என் உயிர் மூச்சாக இன்றளவும் அகவை 30 ல் உள்ளது என்றால் அது தென்னாடு உடைய சிவனின் பாதம் வணங்கி இன்றளவும் என்போன்றவர்களை நிம்மதி படுத்து என்கிற பதமே …

  எல்லாமே நான் செய்த பக்குவம் : விலைபேசாமல் என் அனுபவங்களை இலவசமாக வழங்கியதன் விளைவு இன்று என் நிலை…

  என்றுமே நன்றி சொல்வேன் என்நிலை தாழ்வோ ? உயர்வோ ? சிவமே நன்றி எண்ணங்களை எவ்வளவு பக்குவபடுத்தினாலும் நல்லவர்கள் கல்லடி , சொல்லடி பட்டால் நன்மை தீமை உணர்வார்கள் அதுவரை சமநிலை …

 3. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று சொல்வார்கள். . .

  எவ்வளவு உண்மை பொதிந்தது . . . Salute and Angry …

  பரதேசியாய் வாழ்வதால் தானோ உயிரோடு இருக்கிறேன் என்ற எண்ணம் என்னுள் … பட்டினத்தார் சும்மா சொல்லவில்லை நமசிவாய மந்திரத்தோடு நிறைய விட்டு சென்றுள்ளான்… GreaT

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s