மனித இயல்பு எப்போதுமே தங்களுடைய நலன் சார்ந்ததுதான் -பழ கருப்பையா

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தகுந்தவர்

தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூடியவர்

அப்படி வெளிப்படுத்தியதாலேயே கடந்த ஆட்சியில் தாக்கப்பட்டவரும் கூட.……..

——–

 

நீங்கள் என்னோடு இருந்தால் எனக்கு நல்லது என்று நான் நினைத்தால் நான் உங்களை விடமாட்டேன்.

மனித இயல்பு எப்போதும் தங்களுடைய நலன் சார்ந்ததுதான்.

அதிமுகவுக்கு அரசியல்ரீதியாக எது நலம்பயக்குமோ அதை முடிவெடுக்கிற இடத்தில் அம்மா அவர்கள் இருக்கிறார்கள்.

 – பழ கருப்பையா (இணைப்பில் உள்ள வீடியோ)

 

பழ கருப்பையாவின் பல மனக்குறைகளில் இதுவும் ஒன்று

தொண்டர்களை கட்சியில் மதிப்பதில்லை..

 

ஒரு தொண்டன் என்பவன் யார்?

பெருமாளை சேவிக்கும் தொண்டர்களை வணங்கும் தொண்டரடிப்பொடியாழ்வான் ஆனாலும் சரி, பிரகலாதன் நரசிம்மன்மேல் கொண்ட பக்தியானாலும் சரி.

எந்த சூழ்நிலையிலும் தன் தலைமையை தான் நம்புகிறதை விட்டுக்கொடுக்காதவன்.

————

காங்கிரசை அப்புறபடுத்திய பின் இன்று வரை
அசைக்க முடியாத இயக்கங்களாக தமிழகத்தில் நீடிப்பது
அதிமுக வானாலும் சரி திமுகவானாலும் சரி
தொண்டர்கள் பலத்தால்தான்.

காங்கிரசின் பண்ணையார்த்தனத்தை உடைத்து, அடுத்தடுத்த பதவிகளில் உள்ளவர்கள் எந்த தயக்கமும் இன்றி பழகுவது கழகங்களில் மட்டுமே.

கலைஞரை நேரு, வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் எதிர்த்து வாக்குவாதம் செய்வார்களாம். (ஆனாலும் கடைநிலைத்தொண்டர்களுக்கு கட்சிப்பதவி கூட அளித்ததாகத் தெரியவில்லை, அதற்கு 60வயது இளைஞர் அணித் தலைவரே சாட்சி.)

எம் ஜி ஆரிடம் காளிமுத்து, தாமரைகனி, பண்ருட்டியார், ஆர் எம் வீ போன்றவர்கள்.

அதிமுகவின் ஜெ. ஜெயலலிதா தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் எந்தக் கடைநிலை தொண்டருக்கும் தயங்காமல் கட்சிப்பதவி கொடுக்கிறார். சுதந்திரமாக இயங்க அனுமதிக்கிறார். அதற்கு சமீபத்திய உதாரணமாக : சென்றவருடம் கட்சியிலேயே இல்லாத அஸ்பையர் என்ற நிறுவன உரிமையாளர், அவரது அலுவலகத்திற்கு சென்று பார்த்தால் கட்சிக்கொடி கூடக் கிடையாது. அவர் கட்சியை முன்னிறுத்துவதில்லை. ஆனால் அம்மாவோடு அவருடைய போட்டோ மட்டும் இருக்கும். ஆனாலும் இன்றைக்கு கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணித்தலைவர். ஏன் இதே கருப்பையா சென்ற ஆண்டு அதிமுகவுக்கு வந்தபோது வெறும் கட்சிப்பதவியோடு நின்றுவிடாமல் சம்பந்தமேயில்லாத துறைமுகத்தொகுதி வேட்பாளராக நியமித்தவர்தானே.

தலைவர்கள் முதல் சாதாரண வார்டு கவுன்சிலர் வரை தொண்டர்களிடம் நெருக்கமான உறவு கொண்ட காரணத்தால்தான் காங்கிரஸின் இந்திராகாந்தி முதல் முதல் ராஜிவ், சோனியா, ராகுல்காந்தி வரை முயன்றும் பாஜகவின் வாஜ்பாய், அத்வானிஜி முதல் மோடிஜி, தமிழிசை வரை முயன்றும் தேசியக் கட்சிகள் கழகங்களை அசைக்க இயலவில்லை.

இவ்வளவு ஏன்? இவர் துறைமுகம் தொகுதியில் வேட்பாளராக நின்றபோது, இவரது வார்த்தையின்படியே கட்சி கட்சித்தலைமை மதிக்காத தொண்டர்களின் ஓட்டுக்களால் அறுதிப்பெரும்பான்மையில் எப்படி இவரால் ஜெயிக்கமுடிந்தது?

எனவே இவர் கூறுவதில் உண்மையில்லை அல்லது இவரால் இவருக்கு மேல் உள்ள கட்சித்தலைமையையும் சரியாகக் கணிக்கமுடியவில்லை, தனக்குக் கீழ் உள்ள தொண்டர்களையும் சரியாகக் கணிக்கமுடியவில்லை.

துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய மற்ற கட்சித்தலைவர்கள் / பேச்சாளர்கள் தாம் தாம் சார்ந்த கட்சிக்குத் தொண்டர்கள் பாத்திரத்தை சரியாகச் செய்தபோது, கருப்பையா தாம் சார்ந்த கட்சிக்கு உண்மையான தொண்டனாக இருந்தாரா?

இதேபோல் வேறு கட்சிகளிலிருந்து யார் பேசியிருந்தாலும் அன்றைக்கிரவே அவர் வீட்டுக்கு ஆட்டோவோ சுமோவோ போயிருக்கும், மறுநாள் அவர்கள் நிலையை அவர்களால் கற்பனைசெய்துகூட பார்க்கமுடியாது. இவர் சுதந்திரமாகப் பேசமுடிந்ததே அதிமுவில் இறைமை இருக்கிறது என்பதற்கான உதாரணம்.

அந்த இறைமை இருந்தும் அதை நாலரை வருடம் உபயோகப்படுத்திக்கொள்ளாமல் தன் பதவிக்காலம் முடியும் தறுவாயில் மனதில் பட்டதைப் பேசி வெளியில் வந்த இவர் “மனித இயல்பு எப்போதுமே தங்களுடைய நலன் சார்ந்ததுதான்” என ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி.

 ஆனால் தமிழக அரசியலின் அவலம், “இவர் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி”, “மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர்”. இந்த இரண்டு அடைமொழிகளும் தேமுதிகவின் விஜயகாந்த்க்கும் 100சதவீதம் பொருந்தத்தான் செய்கிறது, இல்லையா?

 

இவரது அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டால் (அதே சமயம் அம்மா ஆதரவு) இவரது பேட்டியால் என்னதான் நன்மை என்று பார்த்தால், மீண்டும் சேம்சைட் கோல்தான்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு (திருக்குறள், இறைமாட்சி, 2)
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு (திருக்குறள், இறைமாட்சி, 3)

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவு இவை அதிமுக தலைமையிடமும் தமிழக முதலமைச்சரிடமும் மட்டும்தான் இருக்கின்றன என்பதை பழ கருப்பையா தெளிவுபடுத்தியிருக்கிறார்.

 

பி.கு. இறுதியாக பாண்டே கேட்ட “நெறிசார்ந்த அரசியல் பேசும் பழ கருப்பையா 2011 தேர்தலில் 4.50 லட்சம் கணக்குகாட்டிய நீங்கள் அவ்வளவுதான் செலவு செய்தீர்களா?” எதையும் சுதந்திரமாக மனதில் பட்டதைப் பேசிப்பழகும் கருப்பையா “ஆமாம், அதே தொகைதான் ” என்று பொய்யாகவாவது சொல்லித்தொலைத்து தூயவர் என்ற பட்டத்தையாவது வாங்க முயன்றிருக்கலாம். அந்தோ, பரிதாபம்.

 

 

 

 

 

Advertisements

3 thoughts on “மனித இயல்பு எப்போதுமே தங்களுடைய நலன் சார்ந்ததுதான் -பழ கருப்பையா

 1. நன்றி : விஜய் ஆனந்த், புதியதலைமுறை (முகநூலில்)

  கருப்பையா மீதுள்ள காதலால் சொல்கிறேன்…!

  ‘ அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா நீக்கி வைக்கப்படுவதாக’ பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். காரணம். ஆட்சிக்கு எதிராக கருப்பையாவின் கூர்மையான விமர்சனம். துக்ளக் விழாவில் கருப்பையா பேசிய பேச்சு, அ.தி.மு.க தலைமையை அதிர வைத்துவிட்டது என புரிந்து கொள்ளலாம்.

  இதே கருப்பையாவோடு நான் முரண்பட்டுப் போன சம்பவம் ஒன்றும் நடந்தது. இன்று இவ்வளவு பேசும் கருப்பையா, அன்று நடந்து கொண்ட விதத்தை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சிக்காக அவரை அழைத்தேன். பத்துநாள் தொடர் முயற்சிக்குப் பிறகே, நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்தார். அப்போது, ‘ அ.தி.மு.க குறித்த கேள்விகள் எதுவும் வேண்டாம். எனது அரசியல் வாழ்வு, நேர்மை அரசியல் ஆகியவை குறித்த கேள்விகள்தான் இருக்க வேண்டும்’ என நிபந்தனையும் விதித்தார். குறிப்பிட்ட நாளும் வந்தது. பெரும் படைவாரத்தோடு வந்தார். அக்னிப் பரீட்சை அரங்கிற்குள் சென்றவர், நெறியாளர் ஜென்ராமோடு பேசிக் கொண்டிருந்தார். நான் ரெக்கார்டிங் அறைக்குள் அமர்ந்து ‘ரோலிங்’ சொல்வதற்கான நேரத்திற்காக காத்திருந்தேன். திடீரென்று அரங்கிற்குள்
  அமைதி.

  ஒளிப்பதிவாளர் ஒருவர் ஓடிவந்து, ” எம்.எல்.ஏ உங்களைக் கூப்பிடுகிறார். சீக்கிரம் வாருங்கள்” எனச் சொல்ல, வெளியே ஓடிவந்தேன். லிப்ட் அருகே நின்று கொண்டிருந்த கருப்பையா, “வாய்யா…நீ சொல்லித்தான் வந்தேன். என்னய்யா நினைச்சிட்டு இருக்கீங்க” என சத்தம் போட, நான் புரியாமல், “சார்… என்ன நடந்தது?” என்றேன்..எதையும் சொல்லாமல் சத்தம் போட்டுக் கொண்டே லிப்ட் கதவைத் திறந்தார். உள்ளே போனதும், ” இந்த நெறியாளருக்கு என்ன சம்பளம் கொடுக்கறாங்க? நான் யார் தெரியுமா?” என கண்டபடி பேச ஆரம்பித்துவிட்டார். அந்த மூன்று மாடி லிப்ட் கீழே எப்போது இறங்கும்? என பதைபதைத்துக் கொண்டே இருந்தேன். கீழே வந்தவர், ” நான் கட்சிக்கு கட்சி மாறிட்டு இருக்கேன். இது சரியான்னு முதல் கேள்வியை வச்சிருக்கார் அந்த நெறியாளர். அ.தி.மு.கவுக்கு எதிராக நிறைய கேள்விகள் இருக்கு? இதுக்குத்தான் சம்பளம் கொடுக்கறாங்களா? இனி அந்த ஆபீஸ் பக்கம் வந்தன்னா கேளு” என்றபடியே காரைக் கிளப்பிக் கொண்டு போனார் கருப்பையா.

  அதிர்ந்து போய் நெறியாளர் ஜென்ராமிடம், ” சார்… என்னதான் நடந்தது?” என்றேன். அவர் எப்போதும் போல் அமைதியாக, ” ஒன்றுமில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு என் அனுமதியில்லாமல் என்னிடம் இருந்த கேள்வித்தாளை பிடுங்கி படித்துவிட்டார். அந்தக் கோபத்தில் செல்கிறார். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்.

  கருப்பையா, அங்கிருந்த அகன்ற பின்னரும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அ.தி.மு.கவுக்கு எதிரான சிறு விமர்சனத்திற்குக்கூட பதில் கூறாமல் அவமானப்படுத்துகிறார். என்ன காரணம்? என அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ” இன்னும் ஓரிரு நாளில் மந்திரி சபை மாற்றம் இருக்கப் போகிறது. பதவி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். அதனால்தான் அவர் பேச மறுத்திருப்பார்” என விளக்கம் கொடுத்தார். அடுத்த இரண்டு நாளில் மந்திரி சபை மாற்றமும் நடந்தது. கருப்பையாவுக்கு சிறு நாற்காலியைக்கூட அ.தி.மு.க தலைமை ஒதுக்கவில்லை. இன்றைக்கு, ‘ கமிஷன் வாங்கலாம். ஊரை அடித்து உலையில் போடலாம்’ என பேசும் அவர், அன்றைக்கும் இதே மனநிலையில் பேசியிருந்தால், அவருடைய நேர்மை அரசியலுக்கு சல்யூட் அடித்திருக்கலாம். துணை சபாநாயகர், ஏதேனும் ஒரு துறைக்கு அமைச்சர் என ஆட்சி தொடங்கிய நாளில் இருந்தே கருப்பையா எதிர்பார்த்தார் என்பதை அவரது மனசாட்சி அறியும்.

  அதற்கேற்பவே, ஜெயலலிதாவை உயர்த்திப் பிடிக்கும் கட்டுரைகளையும் அவர் தினமணியில் எழுதினார். ஒருகட்டுரையில், ‘ சீர்காழி பிராமண குடும்பத்தில் பிறந்த திருஞானசம்பந்தரின் திராவிடப் பற்றை சகிக்க முடியாமல், அவரை ‘திராவிட சிசு’ என ஆதி சங்கரர் வர்ணித்தார். இது ஆரிய முரணே அன்றி திராவிட முரண் அல்ல. அதேபோல, பிராமணக் குடும்பத்தில் பிறந்த முதலமைச்சர் செயலலிதா திராவிடக் கட்சி ஒன்றிற்கு தலைமையேற்று நடத்துவதும் ஆரிய முரண்தான் என முதல்வரை ரொம்பவே தூக்கி வைத்துக் கொண்டாடியவர்தான் பழ.கருப்பையா. கருணாநிதி மீதான விமர்சனத்தை கூர்மையாக்கி, அ.தி.மு.க தலைமையிடம் பாராட்டுப் பெறவும் ரொம்பவே முனைந்தார்.
  எல்லாம் எதிர்மறையாகிப் போனது.

  திராவிடம், சமயம், பண்பாடு குறித்த அவரது கட்டுரையாகட்டும். வள்ளலார், காந்தி குறித்து அவரது பேச்சுக்களாகட்டும். எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அனைத்தும் நடைமுறையில் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இதையும்கூட, கருப்பையாவின் மீதுள்ள காதலால்தான் சொல்கிறேன்…

 2. நண்ப டுடேஅண்ட்மீ,

  //துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய மற்ற கட்சித்தலைவர்கள் / பேச்சாளர்கள் தாம் தாம் சார்ந்த கட்சிக்குத் தொண்டர்கள் பாத்திரத்தை சரியாகச் செய்தபோது, கருப்பையா தாம் சார்ந்த கட்சிக்கு உண்மையான தொண்டனாக இருந்தாரா?//

  அதிமுக வைப் பொருத்தவரை ” தகுதி” முக்கியமில்லை-
  “விசுவாசம் ” தான் முக்கியம்.
  அது இவரிடம் சுத்தமாக இல்லை…. அனுபவிக்கிறார்…!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 3. அதிமுகவில் கட்சி விசுவாசம் ஒன்று மட்டும்தான் அளவுகோல். அதை மீறிய, சேடப்பட்டி, எஸ்டிஎஸ், அனிதா போன்றோர் கதையெல்லாம் தெரிந்ததுதானே. ஜெ. ஒரு தடவை விசுவாசம் இல்லாதவர்களை, மீண்டும் சீண்டுவதில்லை. இதற்கு, நெல்லை கருப்பசாமி, அனிதா போன்று ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஜெ. கட்சி கடைனிலைத் தொண்டர்களையும் மதிக்கிறார் என்பதற்கு, ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன. அதிமுகவில், வாரிசு அடிப்படையில் மதிப்பு கிடையாது. தவறுக்குத் தண்டனை கிடைத்தாலும், செய்யாத தவறுக்குத் தண்டனை கிடைத்தாலும், அமைதியாக கட்சிப் பணி செய்துகொண்டு விசுவாசமாக இருந்தால், திரும்பவும் அதிகாரம், மதிப்பு கிடைக்கும். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், தவறு செய்தால் கண்டிப்பு, தண்டனை உண்டு. இதில் எதுவும் திமுகவில் கிடையாது. அதுதான் திமுகாவுக்கும் அதிமுகாவுக்கும் வித்தியாசம். பழ கருப்பையா அவரின் நன்மதிப்பைக் குலைத்துக்கொண்டுள்ளார். இனி என்ன கட்சியில் சேர்ந்தாலும் அவரால் தன் நன்மதிப்பைப் பெற முடியாது. “விசுவாசமில்லாதவர்” என்ற பெயரைப் பெற்றபின், அரசியல்வாதியாக இருந்து என்ன பயன்?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s